கட்டுரை

அதிமுக எடப்பாடி கை ஓங்குகிறதா?

அரசியல் செய்தியாளர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிமுகவின் உட்பூசல் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

2021- இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது அத் தொகுதி. அதிமுக அணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவேரா திருமகன் வென்றிருந்தார். அவரது திடீர் மரணம் இந்த இடைத் தேர்தலுக்கு வித்திட்டது. திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸுக்கே அத்தொகுதி ஒதுக்கப் பட்டு, வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவோ தமாகாவுக்கு வழங்கப்பட்டிருந்த இத்தொகுதியை வாசனிடம் கேட்டு தாங்களே நிற்கப்போவதாக வாங்கிக் கொண்டது. பாஜகவினருக்கு அத்தொகுதியை வாங்கி தாங்களே நிற்கலாமென்ற ஆசை கூட இருந்திருக்கலாம். அந்த எதிர்பார்ப்பு சமூக ஊடகங்களில் வெளிப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் உறுதியான நிலைப்பாடு அந்த வாய்ப்பை பாஜகவினருக்கு கிடைக்கச் செய்யவில்லை. ஏன் தனித்து நிற்கலாமே என பாஜகவை எதிர்ப்பாளர்கள் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு குடைச்சலை அதிகப்படுத்தி இருக்கிறது. பாஜகவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஓபிஎஸ், அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினார். அத்துடன் புதிய நீதிக்கட்சித்தலைமை, போன்றவர்களை சந்தித்து ஆதரவு கோரியதுடன், தன் தரப்பில் வேட்பாளரை நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள் ளார். இவர் கொடுக்கும் நெருக்கடி எடப்பாடி தரப்பு அதிமுகவில் வேட்பாளரை அறிவிப்பை தாமதப்படுத்த வைத்துள்ளது. அதிமுகவின் இருபிரிவும் தாங்கள்தான் அதிமுக என வேட்பாளரை நியமிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு உரிமைகோரி ஓபிஸ், எடப்பாடி இடையிலான மோதல் உச்சநீதிமன்றத்தில் மையம் கொண்டுள்ளது. இன்னொரு புறம் சசிகலா தரப்பு தொடுத்திருக்கும் வழக்கும்

நீதிமன்றத்தில் உள்ளது. அரசியலில் வெற்றி தோல்விகள் நீதிமன்றங்களில் அல்ல மக்கள் மன்றங்களில்தான் தீர்மானம் செய்யப்படுகின்றன என்பதுதான் வரலாறு. ஆகவேதான் ஈரோடு தொகுதி இடைத் தேர்தலை எடப்பாடி தரப்பு மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகுகிறது.

“என்னைப் பொருத்தவரை எந்த சூழ்நிலையிலும் அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் 

கிடைக்காத நிலையில் அதற்கு பன்னீர் செல்வம் காரணமாக இருக்கமாட்டான் என்று சொல்லிவிட்டேன்,' என்று சொல்லியதன் மூலம் சூசகமாக இந்த இடைத்தேர்லில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு முட்டுக்கட்டை போடப்படும் என்று கோடு காட்டி இருக்கிறார் ஓபிஎஸ். “அதிமுக சட்டப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இருவரும் இணைந்து கையெழுத்துப் போட்டால்தான் சின்னம் கிடைக்கும். ராஜினாமா செய்த பதவியை மறுபடியும் அவர் கோரமுடியாது' என்று கூறியிருக்கும் ஓபிஎஸ், ‘ பிரதமர் மோடி இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறுகிறார். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்‘ என்றும் கூறினார்.

சசிகலாவோ,‘தொண்டர்கள் பலம் தங்களுக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறவர்கள் இடைத் தேர்தலுக்கு ஆதரவு கேட்டு பாஜக அலுவலக வாசலில் நிற்பது வேடிக்கையாக இருக்கிறது' என்றார்.

உண்மைதான். சில ஆண்டுகளுக்கு முந்தைய காட்சி மிகவும் வேறுபட்டது. ‘அம்மா இருந்தவரைக்கும் இடைத்தேர்தலோ வேறு எந்த தேர்தலோ என்றால் கூட்டணிக் கட்சிகள் அவரைப் போய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு வருவார்கள். இப்போதோ சின்ன சின்ன கட்சிகளைக் கூட இவர்கள் நேரில் சென்று போட்டி போட்டு ஆதரவு கேட்கிறார்கள். இது நம்மைப் போன்ற பெரிய கட்சிக்கு இழுக்கு என்று இருதரப்புக்கும் தெரியவில்லையே...' என வருத்தப்படுகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

 சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் சசிகலாவின் செல்வாக்கும் அதிமுகவில் வீழ்ச்சி அடைந்துதான் இருக்கிறது. அவரும் வந்ததில் இருந்து ஓபிஎஸ், எடப்பாடி அணியினருக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அழைப்புகள் விடுத்துப்பார்க்கிறார். யாரும் மசியவே இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிற நிலையில் இரு தரப்பும் ஒன்றிணைந்தால்தான்  அக்கட்சிக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஏற்கெனவே மத்தியில் இருக்கும் ஆட்சிஅதிகாரத்தின் பின்னணியில், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட

வேண்டிய இடத்தை, வலுகுறைவாக இருந்தாலும் பாஜகதான் எடுத்துக் கொண்டிருப்பது போன்ற தொரு தோற்றம் ஊடகங்களின் உதவியால் இருக்கிறது. இந்நிலை தொடர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல என்று அக்கட்சி யின் நலன் விரும்பிகள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சின்னம் போனால் போகட்டும். மேற்குமண்டலத்தில் ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் அவருக்கு செல்வாக்கே இல்லை என்பதை நிரூபித்துவிடலாம் என எடப்பாடி அணி கணக்குப் போடலாம். தனக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும் இரட்டை இலை  சின்னத்தை முடக்குவதன் மூலம் அந்த அணியுடன் பேரம்பேச வலுவான காரணத்தைப் பெறலாம் என ஒபிஎஸ் அணி நினைக்கலாம். ஆனால் உச்ச

நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று எடப்பாடி நம்புவதாகச் சொல்கிறார்கள். அத்துடன் என்ன ஆனாலும் ஓபிஎஸ் பணப்பெட்டியைத் திறக்கமாட்டார், அதுவே தங்களுக்குச் சாதகம் எனவும் எடப்பாடி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இரு அணிகள் இணைவது அல்லது பிரிந்திருப்பதை அக்கட்சிக்காரர்கள் தீர்மானிப்பதை விட வெளியில் உள்ள சக்திகளே தீர்மானிக்கும் நிலை உள்ளது. அது இந்த இடைத்தேர்தலை ஒட்டி தீர்மானிக்கப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடப்படுமா என்பதே கேள்வி.

ஆகமொத்தம் சொத்துவரி உயர்வு, மின் கட்டண் உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளை முன்வைத்து இத்தேர்தலை எதிர்க்கட்சி அணிகள் சந்திக்கப்போவதில்லை. இல்லையா?

பிப்ரவரி, 2023